Sunday, 15 January 2012

ஆன்மா அப்பாவியாய்......


மறுத்தலும் விரும்புதலுமாய்
கடக்கின்றன நாட்கள்!

வந்து வந்து போகின்றன
பொங்கலும், போகியும்..!!
போகியைப்போல் பழையதை
ஒழித்துக்கட்டவும் முடியவில்லை
பொங்கலைப்போல் புதியதை
ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை

வெளிச்சுவருக்கு சுண்ணாம்பு பூசி
பளிச்சென்று காட்டுகின்றனர்

கள்ளமும் கபடும் நிறைந்த
உட்சுவருக்கு எந்த சாயத்தைப் பூச
காத்திருக்கின்றனர்?
தாகத்தில் உலர்ந்த நாவுடன்
நீர்ச்சுனை தேடினால்
கானல் நீர் கடலாய்க் காட்சி தருகிறது

தினசரி போராட்டம்
நூலாம்படையோடு!
அறுத்து எறிந்தால்
சிலந்திகள் ஒவ்வொன்றும்
என் பொழுதுகளை சுற்றி
வலைக்கோட்டை கட்டி
வம்புக்கிழுக்கின்றன!

ஒவ்வொரு அடியும்
ஒரு பிரளயத்தையே
உண்டுபண்ணுவதால்
பூகம்பப் பதட்டத்தோடு
வாழ்க்கை நகர்கிறது!

இறக்கி வைக்க முடியாத
சுமைகள் அழுத்தி ஆர்ப்பரிக்க
முள்கிரீட வலிகளை
உணர ஆரம்பிக்கின்றேன்....

சாட்டை விளாசலில்
சுழன்று விழுகிறது
ஆன்மா அப்பாவியாய்..

No comments:

Post a Comment