சென்னைக்கு அருகில் இருக்கும் ஆவடியில் நந்தகுமாரின் இளமைப்பிராயம் கழிந்தது. பண்ணிரண்டு வயது. ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். பள்ளிக்குச் செல்வது வேப்பங்காயாய் கசந்தது. கற்கும் பாடங்கள் நினைவில் நிற்பதில்லை. கற்றல் குறைபாடு அவருக்கு தீராதப் பிரச்சினையாக இருந்தது. ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா (Dyslexia) என்று அழைக்கப்படும் இந்த உளவியல் பிரச்சினை கற்றல் தொடர்பானது.
பிரச்சினை நந்தகுமாரோடு முடிந்துவிட்டிருந்தால் தேவலை. நந்தகுமாருக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. முன் ஏர் எப்படிப் போகுமோ, அப்படித்தான் பின் ஏரும் போகும் என்பது ஊர்களில் பேசப்படும் சொலவடை. நந்தகுமாரைப் பின்பற்றி அவரது தங்கைகளும், தம்பியும் மிகச்சரியாக, சொல்லி வைத்தாற்போல் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள்.
ஒரு குடும்பத்தின் நான்கு வாரிசுகளுமே கல்வியை பாதியில் விட்டால், சமூகம் அந்தக் குடும்பத்தை எப்படிப் பார்க்கும்? இத்தனைக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத அளவுக்கு வறுமையெல்லாம் அக்குடும்பத்தில் இல்லை. தெருப்பிள்ளைகள் இவர்களோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. “அந்தப் பசங்க மக்குப்பசங்க. அவங்களோட சேர்ந்தா நீங்களும் மக்காயிடுவீங்க!” உற்றாரும், உறவினரும் கேலியாகவும், கிண்டலாகவும் நால்வரையும் பார்த்தார்கள்.
புத்தருக்கு ஞானம் கிடைக்க போதிமரம் கிடைத்தது. போதிமரத்தடியில் உட்காராமலேயே திடீரென ஒருநாள் புத்தர் ஆனார் நந்தகுமார். பள்ளிக்குப் போகாமலேயே பிரைவேட்டாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் என்ன? நண்பர் ஒருவர் அதுபோல எழுதலாம் என்று ஆலோசனை சொல்ல எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்தார் நந்தா. இந்த வெற்றி தந்த பெருமிதம் பத்தாம் வகுப்புத் தேர்வையும் எழுதவைத்தது. இதுவும் பாஸ். “அடடே. எல்லாமே ஈஸியா இருக்கே? பள்ளியிலேயே சேர்ந்து படிக்கலாம் போலிருக்கே?” என்று எண்ணினார் நந்தா. எட்டாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் பிரைவேட்டாக எழுதிய அவரை +1 வகுப்பில் சேர்க்க பள்ளிகள் மறுத்தன. போராடிப் பார்த்தார். முடியவில்லை. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல +2 தேர்வையும் பிரைவேட்டாகவே எழுதி வென்றார் நந்தா.
இப்போது கல்லூரியில் சேர்ந்து பயிலும் ஆசை நந்தாவுக்குள் முளைவிட்டிருந்தது. பள்ளியில் படிக்காமல் எட்டு, பத்து, பண்ணிரெண்டு என்று எல்லா வகுப்புகளையுமே பிரைவேட்டாக தேறியிருந்த நந்தாவை சேர்த்துக்கொள்ள கல்லூரிகளுக்கு மனமில்லை. கல்லூரிதோறும் கால்கடுக்க ஏறி, இறங்கி கடைசியாக வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆங்கிலம் இளங்கலை படிப்பை படிக்க ஆரம்பித்தார் நந்தா. அம்பேத்கர் கல்லூரியில் இளங்கலை முடிந்ததும் சென்னை மாநிலக்கல்லூரியில் அதே ஆங்கில இலக்கியத்தை முதுகலையாக கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போது கல்வி தவிர்த்து, என்.சி.சி. போன்ற விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.
முதுகலைப்பட்டம் பெற்ற பிறகும் ‘என்னவாக ஆகப்போகிறோம்?’ என்று எந்த முன்முடிவும் நந்தாவிடம் இல்லை. என்.சி.சி.யில் இருந்ததால் இராணுவம் தொடர்பான பணி எதிலாவது சேரலாம் என்று நினைத்தார். சென்னையில் இராணுவ அதிகாரிகளை உருவாக்கும் ஆபிஸர்ஸ் டிரைனிங் அகாடமி (OTA)-யில் சேர்ந்தார். இடையில் ஒரு விபத்து ஏற்பட, அந்தப் படிப்பையும் பாதியில் விட வேண்டியதாயிற்று. அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து அறிந்தார். அதுவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்றால் பட்டப்படிப்பு போல மூன்று வருடங்கள் படிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எல்லோரையும் போல நந்தாவும் நினைத்திருந்தார். சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டித்தேர்வு போதுமானது என்ற விஷயமே நந்தாவை மிகவும் கவர்ந்தது.
இன்று நந்தகுமார், ஐ.ஆர்.எஸ், சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தில் துணை ஆணையளராகப் பணிபுரிகிறார். ஒரு காலத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் சேர்க்கத் தயங்கிய மாணவர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, நாட்டை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்.
முப்பத்து மூன்று வயதான நந்தகுமாரை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
“எனக்கே எல்லாமே ஆச்சரியமா தாங்க இருக்கு. திடீருன்னு மறுபடியும் படிக்கணும்னு ஆர்வம் வந்தது. விடாமுயற்சியோடு, கடுமையாகப் படித்தேன்னு எல்லாம் சொல்லமுடியாது. சின்சியரா படிச்சேன். அவ்ளோதான்” என்று அளவாகப் புன்னகைக்கிறார். “கல்வி மிக மிக முக்கியமானதுங்க. ஆனா நம்மோட கல்விமுறையிலே எனக்கு கொஞ்சம் அதிருப்தி இருக்கு. நம்ம கல்விமுறை படிப்பாளிகளை உருவாக்குதே தவிர, அறிவாளிகளை உருவாக்குவதாக தெரியவில்லை. மாணவர்கள் கல்வி என்றால் கசப்பானது என்று நினைக்காமல் ஆர்வத்தோடு பள்ளிக்கு வரும் வகையில் நம்ம கல்விமுறையை மாற்றணும்.
கொடுமை பாருங்க. நான் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தயாராகும்போது படிச்சதெல்லாம் ஏற்கனவே பள்ளியில் படிச்சதா தானிருக்கு. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை வேறு வேறு வடிவங்களில் படிச்சிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. ஒருவன் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த வயதுக்கு தேவையான வாழ்க்கைக்கல்வி இன்றைய சூழலில் அவசியம்!
அப்புறம், சிவில்சர்வீஸ் எக்ஸாம்னாலே எல்லோரும் ஏதோ பெரிய பட்டப்படிப்பு மாதிரி பயப்படுறாங்க. இது ஒரு போட்டித்தேர்வு, பட்டப்படிப்பு அல்ல. பயமில்லாம நிறைய பேர் இந்த தேர்வுகளை எழுதணும். நம்ம இளைய தலைமுறை எதிர்ப்பார்க்கிற அட்வெஞ்சர் கேரியரா நிச்சயமா சிவில் சர்வீஸ் அமையும். ஆறாவது ஊதியப்பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்த்துக்கு அப்புறமா நல்ல சம்பளமும் கிடைக்குதுங்க!” என்கிறார். கற்றல் தொடர்பான டிஸ்லெக்சியா பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட வென்றுவிட்டேன் என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.
“அதிருக்கட்டும் சார், உங்களைப் பார்த்து படிப்பை பாதியில் விட்ட உங்க தங்கைகள், தம்பி என்ன ஆனாங்க?” என்று கேட்டால், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார்.
“சொன்னா நிச்சயமா நம்பமாட்டீங்க. நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ன்னு அவங்களும் என்னை பின் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்கன்னா உங்களால நம்ப முடியுதா?”
படிப்பை பாதியில் நாலுபேரும் அடுத்தடுத்து விட்டதை கூட நம்பிவிடலாம். மீண்டும் தன்னெழுச்சியாக படித்து நல்ல நிலைக்கு சொல்லிவைத்தாற்போல நான்கு பேருமே உயர்ந்திருப்பது என்பது கொஞ்சம் சினிமாத்தனமாக தெரிந்தாலும், நந்தகுமாரின் குடும்பத்தில் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கல்வி அடிப்படையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான குடும்பம் இன்று, அதே கல்வியாலேயே தலைநிமிர்ந்து வாழ்வது மகிழ்ச்சியான விஷயம்தான் இல்லையா?
டிஸ்லெக்சியா!
அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ படம் வெளியானதற்குப் பிறகு இந்த குறைபாடு குறித்த விவாதங்கள் அதிகளவில் எழுந்த்து. கற்றல் குறைபாடு இருப்பவர்களும் சராசரியானவர்களே. ஆனால் அவர்களிடம் வாசிப்புத்திறன் குறைவாக காணப்படும். கவனம் பிறழ்வது, எழுத்துத்திறன் குறைவது, கணிதப்பாடத்தை புரிந்துகொள்ள முடியாமை ஆகியவை டிஸ்லெக்சியாவின் பாதிப்புகள். எழுத்துக்களையும், அதற்கான உச்சரிப்புகளையும் அவ்வப்போது மறந்துவிடுவதாலேயே இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த கற்றல் குறைபாடுக்கும், அறிவுவளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிறுவயதில் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சமூகத்தின் உயர்ந்த நிலைகளுக்கு உயர்ந்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில், வால்ட் டிஸ்னி போன்றவர்களுக்கும் சிறுவயதில் இக்குறைபாடு இருந்திருக்கிறது.
இக்குறைபாடுக்கு காரணமான மூளைதிசுக்களை முற்றிலுமாக சரிசெய்ய முடியாது என்றாலும், மனநல மருத்துவரின் ஆலோசனைகளோடு தகுந்த மாற்றுச் சிகிச்சைகளின் மூலமாக குறைபாட்டினை போக்க முடியும்.
No comments:
Post a Comment