Monday, 27 February 2012

சுற்றுப்புறத் தூய்மை


சுற்றுச் சூழல் தூய்மை! உலகத்தின் கவலையே இது தான். சுற்றுச் சூழல் தூய்மை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ! இது, மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, புவியின் வாழ்வுக்கும் பொருந்தும். மனிதன் இயற்கையோடு இணைந்து வாழும்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. மனிதன் இயற்கையை மீறுகிறபோதுதான் அவஸ்தை, ஆபத்தெல்லாம்.
 



இயற்கைச் சீற்றம், இயற்கைச் சீற்றம் என்கிறோமே அதைச் சீண்டுவது யார்? நாம் தானே... அண்டங்களையெல்லாம் மாசுபடுத்திவிட்டு, ஐயோ அம்மா என்று அலறினால்… எப்படி?
விஞ்ஞான வெளிச்சத்தில் இருக்கும் நாம் சுற்றுச் சூழல் விஷயத்தில் கொஞ்சம் சரிந்து தான் இருக்கிறோம். ஆம் காடுகளை அழித்தோம் கேடு வந்தது. மரங்களை வெட்டிச் சாய்த்தோம் மழை நின்றது. இன்று கிணற்றுக்குள் வாளியை விட்டால் தண்ணீர் வருவதில்லை. கண்ணீர் தான் வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்து நம் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகிறது. மழை நீர் சேகரிப்பே இதற்கு மாற்றுவழி. அணுமின் கழிவு தொழிற்சாலைக் கழிவு
மனிதக் கழிவு. இவைகளெல்லாம் நல்ல சுற்றுச் சூழலுக்கு எதிரானவைகள், எதிரணிகள்.

வறண்ட பாலைவனங்களில் அணுகுண்டை வெடிக்கிறோம் அது பூமியையும் வானத்தையும் மாசுபடுத்துகிறது, இதற்கு என்னதான்… தீர்வு? பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்கும் வீடுகளுக்கு, வீதிகளுக்கு உள்ளாட்சித் துறை ஊக்கப்பரிசு வழங்கி உற்சாகப்படுத்தலாம்.
 

ஆகவே தூய்மை காப்போம் அதற்காகத் தொண்டு செய்வோம் ! வாரீர் !

No comments:

Post a Comment