Friday, 1 July 2011

யார் அவள் ?

திடீரெனப் பெய்த மழையில்
நான் நனைந்து வீடு திரும்பிய போது …

“குடை எடுத்துக் கொண்டு
போனால் கௌரவக் குறைச்சலோ?” இது அப்பா!

“ஒரு ஓட்டம் எடுத்திருந்தால்
முன்னமே வந்திருக்கலாம்” இது அண்ணன்!

“எங்காவது ஒதுங்கி விட்டு பின்னர்
வந்திட புத்தி இல்லையே” இது அக்கா!

“பாழாய்ப் போன மழை சிறிது நேரம்
கழித்து வந்திருக்கக் கூடாதா?” இது அவள்!

தேர்வில் மதிப்பெண் குறைவாக
வாங்கி வீடு திரும்பிய போது …

“சரியாகப் படித்தால் தானே” இது அப்பா!

“நான் கொடுத்த குறிப்புக்களை
சட்டை செய்தால்தானே” இது அண்ணன்!

“வகுப்பில் கவனம் காட்டாவிட்டால் ..”
இது அக்கா!

“உம்… சற்று சுலபமாய் கேட்டிருக்கலாம்”
இது அவள்!

சாலையில் சைக்கிள் இடித்து சிறு
காயத்துடன் வீடு திரும்பிய போது …

“ பராக்கு பார்த்து நடந்தால்…. “
இது அப்பா!

“பஸ் ஸ்டாப்பில் குமரிகளை நோட்டம் விட்டுக்
கொண்டே நடந்தால் வேறு என்ன நடக்கும்?”
இது அண்ணன்!

“சைக்கிளுக்குப் பதில் காரோ, லாரியால்
இருந்திருந்தால் என்னா யிருக்கும்?”
இது அக்கா!

“சைக்கிள் ஓட்டியவனுக்கு கவனம்
வேண்டாம்! கண் எங்கே போச்சோ?”
இது அவள்!

எந்த இடரிலும், எந்தச் சூழ்நிலையிலும்
மற்றவர் என்னிடமே குறை கண்டிட,
அவள் மட்டுமே மற்றவரை கண்டித்தாள்!

ஏனெனில் அவள்……..
என் தாய்!

No comments:

Post a Comment