Friday, 17 June 2011
காதல் என்பது
காதல் மனித ஆன்மாவைக் கவ்வி இழுக்கிறது . சில நேரங்களில் கறைப் படிய வைக்கிறது.
நாகரீக உலகில் காதல் என்பது வேடிக்கையாகிவிட்டது.
எங்கேயோ எவளோ, ஒருத்தியை சந்திக்கின்ற இளைஞன், அவளைப் பற்றிய எந்த விவரத்தையும் கேளாமல் காதலிக்கத் தொடங்குகிறான்; அந்த காதலின் மூலம் மலை உச்சிக்குப் போனாலும் போகிறான்; படுப்பாதாளத்தில் விழுந்தாலும் விழுகிறான்.
அந்த சந்நிதானத்தில் நிதானம் என்பது இல்லாமல் போய் விட்டது.
பழங்காலப் பண்பாடுகள், சம்பிரதாயங்களில் காதல் ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
உடல் வெறி அடங்கிக் கிடந்தது; ஆசைக் கூட அமைதியாக இருந்தது; பார்வை நாடகமே பல நாட்கள் நடந்தது.
நிலம் நோக்கி சிரிக்கின்ற சிரிப்பு, காதலை நீடிக்க செய்தது. உணர்வுகள் ஒன்றி நின்றன. உடல் வெறி இல்லாமலே இருந்தது. திருமணம் ஒரு புனித சடங்காக கருதப்பட்டது. காதல் என்பது கல்யாணம் முடியும் வரை. கல்யாணத்துக்குப் பின்னோ அது வெறும் காதல் இல்லை; புனித வழிபாடு. பெண்ணிடம் தாய்மை நிரம்பிக் கிடந்தது.
இன்றோ.......
உடல் இச்சையே காதலாகி விட்டது.
மேலை நாட்டு நாகரீகத்தில் திருமணம் என்பது ஒரு குத்தகைதான்; அதற்கொரு புனித தன்மை உருவாக்கப்படவில்லை.
இந்து தர்மம் இல்லறத்தை வேலிக்குள் அடங்கிய பயிராக வளர்த்தது.
தாலிக்குள் அடங்கிய கோவிலிலே, தர்ம தேவனின் மணியோசை கேட்டது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மற்றவர்கள் முன்னிலையில் கணவனும் மனைவியும் பேசிக் கொள்வது கூட இல்லை.
கை கோர்த்துக் கொண்டு கடற்கரைக்குப் போகும் நாகரீகம் வெகு விரைவில் காதலை கசப்பாக்கி விடுகிறது.
நாம் மீண்டும் பழங்காலத்துக்கு திரும்பியாக வேண்டும். தாழிட்ட கதவும், தடைப்பட்ட காதலுமாக தலைவனும், தலைவியும் போராடும் இலக்கியச் சுவைக்கு திரும்பியாக வேண்டும்.
காமம் முன்னால் தள்ள, நாணம் பின்னால் இழுக்கும் நாடகமே காதலில் சுவையூட்ட வல்லது.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றால் காதலும் ஒரு வியாபார பொருளாகி விடும்.
அது சினிமாவுக்குப் பொருந்தலாம்; தெய்வீக இல்லறத்திற்கு பொருந்தாது.
ராமனுக்கு சீதை வாய்த்ததுப் போல், முருகனுக்குத் தெய்வானை வாய்த்ததுப் போல் தனக்கும் வாய்க்க வேண்டும் என்று விரும்பும் இளைஞனே எதிர்காலத்தை நிம்மதியாக்கிக் கொள்கிறான்.
காதலும், இல்லறமும் எவ்வளவு உயர்ந்த தத்துவங்கள்! ஆனால் நாகரீகம் அதைக் கூட போலியாக்கிவிட்டது. வெறும் சதை பசியாக்கி விட்டது.
ஆதி மனிதனுக்கு ஏற்ப்பட்ட ஆசைக்கும், இன்று பாதி மனிதர்களுக்கு ஏற்ப்படும் காதலுக்கும் பேதமில்லாமல் போய்விட்டது.
நான் கிராம சூழ்நிலையில் வளர்ந்தவன். நமது பண்பாடுகளின் புனிதத் தன்மையில் எனக்கு பய பக்தி உண்டு.
ராகங்களில் இனிய ராகங்களும் உண்டு; சோக ராகங்களும் உண்டு; அது பாடுகிறவனின் மனோ தர்மத்தை பொறுத்தது.
மங்கையர்களில் மத்தளங்களும் உண்டு; வீணைகளும் உண்டு; நீங்கள் எதை வாசிக்க விரும்புகிறீர்கள்?
ஒன்று செய்யுங்கள்.
காதலை காவியத்திற்கு விட்டு விடுங்கள்; உங்கள் திருமணத்தைப் பெற்றோரிடம் ஒப்படையுங்கள்; பிறகு உங்கள் எதிர்காலத்தைப் பாருங்கள்.
வாழ்க்கையில் பாலுணர்வும் ஒரு பகுதியே தவிர, அதுவே வாழ்க்கையாகி விடாது.
குடும்பத்தை பிரிந்து, தாய் தந்தையரை வெறுத்து ஒருத்திப் பின்னால் ஓடுவது நிரந்தர நிம்மதியைத் தராது.
காதல் ஒரு கட்டத்தில் வெறுப்பாகிக் கட்டிக் கொண்ட மனைவியோடு கணவன் ஐக்கியமானதைச் 'சிலப்பதிகாரம்' செப்புகிறது.
இன்னும் அழுத்தமாக சொல்வதானால், காதலித்துக் கல்யாணம் செய்வதை விடக் கல்யாணம் செய்து காதலிப்பதே மேல்.
பலரது வாழ்க்கையை நான் பார்த்திருக்கிறேன். தவறான தேர்வுகளில் குடும்ப வாழ்க்கையை நரகமாக்கி கொண்டவர்கள் அவர்கள்.
காதலின் புனிதத்துவம் கெட்டுப் போனதால் ஏற்ப்பட்ட விளைவு இது.
கண்ணில் தெரிவதெல்லாம் நல்லக் காட்சியாகி விடாது. இளம் பருவத்து மனதுக்கு எடைப் போடத் தெரியாது. தாயும், தகப்பனும் எடைப் போடும் எந்திரங்கள்.
இளைஞர்களே!
உங்கள் விருப்பம் போல் கிருதாவை நீளமாக வைத்துக் கொள்ளுங்கள்; ஜடா முடியை வளர்த்துக் கொள்ளுங்கள்; ரவிக்கைத் துணியில் சட்டைத் தைத்துக் கொள்ளுங்கள்; ஆனால் இயற்கையான அழகுக்கும், ' போம்' ரப்பருக்கும் வித்தியாசம் தெரிந்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் காதலித்தே கல்யாணம் செய்வது என்று முடிவு கட்டுவதானால், கம்பனின் ராத கதையைப் படித்து விட்டு, ஒரு சீதையைக் காதலியுங்கள்.
கவிசக்ரவர்த்தி கண்ணதாசன்
கடைசி பக்கம் என்ற நூலிலிருந்து...
தமிழ் தாயகத்துக்காக:-
ப. ரவிச்சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment