தம்பி,
வேகம் குறை…
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்
உன் பைக்கில்
உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?
மழை நனைத்த சாலையும்
மணல் நிறைந்த பாதையும்
திறன் மிகுந்த யாரையும்
புரட்டிவிடும் சருக்கியே
உலகாள்பவன்
உனக்களித்த
உடலுறுப்புகளை
ஊனமாக்காதே
பேணிப் பாதுகாக்கும்
புலண்களை
ஊமையாக்காதே
காதில் கேட்பதற்காக
கைபேசியை
கழுத்தில் வைக்கும்போது
அது
அலைபேசியல்ல அன்பரே
அரிவாளென்று அறி
தீ சுடுமென்றோ
தீயவை கெடுக்குமென்றோ
சொல்லித் தெரிவதோ அறிவு
விபத்தின் விபரீதம்
விளங்காதா உனக்கு
முழங்கை
மூட்டு பிறழ்ந்தவன்
முழுக்கை யுடைந்தவன்
முகத்தில் தழும்பு படைத்தவன்
நடை குலைந்தவன்
நொண்டி நடப்பவன் என
எத்தனை ஆதாரங்கள்
போதாதென்று
அகால மரணங்கள்....
பெற்ற தாயை
பேதலிக்கவிட்டுப்
போய்ச் சேர்ந்தவர்
கட்டிய மனைவியின்
காத்திருப்பை நிரந்தரமாக்கி
கண்மூடியவர்
நண்பர்களை விட்டோ சேர்ந்தோ
நீள்துயில் கொண்டவர்
பேர் வைத்தப் பிள்ளைகளை
பாரில் தவிக்கவிட்டு - இறுதி
ஊர் போய்ச் சேர்ந்தவர்
தொலைதூரப் பயணத்தை
இரு சக்கரத்தில் கடந்தால்
தமிழ்நாட்டுச் சாலைகள்
தண்டுவடத் தட்டுகளை
மென்றுவிடும் தம்பி
வாழ்க்கையில் முந்து
வளைவுகளில் முந்தாதே
தொழிலில் காட்டு தோரணையை
தெருவில் காட்டாதே
விவேகத்தைக் காட்டு
வேகத்தைக் கூட்டாதே
உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம்
வேகம் குறை
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்.
No comments:
Post a Comment