Monday, 26 December 2011

தேசிய அளவில் 15 சதவீதம் விபத்துகள் தமிழகத்தில் தான்



மிழகத்தில், வாகனங்கள் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் உருவாகாததால், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்தாண்டில், கடந்த செப்., வரை நிகழ்ந்த சாலை விபத்துகளில், 11 ஆயிரத்து, 779 பேர் பலியாகியுள்ளனர். மாதம் ஒன்றிற்கு, 5,000 முதல், 6,000 வரையிலான சாலை விபத்துகள், தமிழகத்தில் நடக்கின்றன. நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில், கடந்தாண்டு தமிழகத்தின் பங்கு, 15.1 சதவீதம் (64,996 விபத்துகள்).


விதியை மதிப்பது இல்லை: வெளிச்சமின்மை, சாலையின் தன்மை காரணமாகவே, பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது தவிர, ஓட்டுனரின் கவனக்குறைவும், 78.5 சதவீத விபத்துகளுக்கு காரணம் என, சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், வாகனங்களின் தன்மைக்கு ஏற்பவும், சாலைகளின் நிலை கருதியும், செல்ல வேண்டிய வேகம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் அதை மதிப்பதோ, சாலை விதிகளின்படி நடப்பதோ இல்லை. சென்னையைச் சுற்றியுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், தினசரி டிப்பர் மற்றும் கன்டெய்னர் லாரிகள் மோதி, அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். சமீபத்தில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், இரண்டு கன்டெய்னர் லாரிகளுக்கு இடையில் சிக்கி, பிளாஸ்டிக் வியாபாரி ஒருவரும், டிப்பர் லாரி மோதி, குற்றப்பிரிவு போலீஸ் ஒருவரும் பலியாகி உள்ளனர்.


தடுக்கும் நடவடிக்கை: இது போன்று விபத்துகள் நடப்பதைத் தடுக்கும் விதமாக, மாநில போக்குவரத்து துறையும், மாநில போக்குவரத்து திட்டமிடும் பிரிவும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும், குறிப்பிட்ட தொகை இதற்காக ஒதுக்கப்படுகிறது. இதில், சாலைகளை மேம்படுத்துதல், வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், அறிவிப்பு பலகைகள் வைத்தல், ஒளிரும் அமைப்புகளை உருவாக்குதல், ரோந்து வாகனங்களை அதிகப்படுத்தி, விபத்துகளை கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில், சாலை விபத்து மேலாண்மை திட்டத்தின்படி, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு, கையடக்க கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம், விபத்து நடந்த இடம், விபத்தின் தன்மை, வாகன அடையாளம் உள்ளிட்டவை பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வாங்கித் தருவதற்கும், விபத்தை ஏற்படுத்தியவருக்கு, உரிய தண்டனை பெற்றுத் தரவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


விழிப்புணர்வு அவசியம்: இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நடக்கும் சாலை விபத்துகளை கண்காணிக்கவும், அது குறித்த தகவல் திரட்டை ஏற்படுத்தவும், "சாலை விபத்து தகவல் மேலாண்மை திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய, மாநில, உள்ளூர் சாலைகளில் நடக்கும், சாலை விபத்துகளின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, விபத்துகளை ஒப்பிட்டு, காரணங்கள் கண்டறியப்படுகின்றன. இவை ஆராயப்பட்டு, தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, தேவையான அனைத்தும் செய்யப்படுகிறது. இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment