நஜீம்பாயின் வீடு சந்தோசத்தில் நிரம்பியிருந்தது, அமீரகத்திலிருந்து மகளும் மருமகனும், பேரப்பிள்ளை ஆலமும் வந்திருந்தார்கள். அன்று நஜீம்பாய் மனைவி வஜிஹாவின் சமையல் வாசத்தில் வீடே மணத்துப் போயிருந்தது.
காலையில் புரோட்டாவும் குடல்கறியும் அனுபவித்துச் சாப்பிட்டபடி மாப்பிள்ளை சொன்னார்," நாங்க எப்பவோஅறுத்த ஆட்டையும் என்னிக்கோ அறுத்த கோழியையும், காஞ்சுப் போன காய்கறியையும் சாப்பிட்டு நாக்கு செத்துப்போயிருக்கோம், நம்ம ஊருக்குவந்து இப்டி சாப்டும்போதுதான் நாக்குல உயிர்வருது " என்றார்.
பாயின் மகளும்," வாப்பா எங்களுக்கு வர்ற தண்ணிகூட பாடம்பண்ணி புட்டியில அடைச்சுதான் கிடைக்குது...ஒரு ருசியும் இருக்கறதில்ல.." என்று நொந்துக்கொண்டாள் .
இவர்கள் பேச்சைக்கவனித்தபடியே அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட வஜிஹா ,"ஏம்மா இன்னம் எத்தன நாள்தான் அங்கேயே இருபிங்க, சட்டுன்னு நம்மூர்லவந்து வாழற வழியப்பாருங்க, அதான் நம்ம பிள்ளைகளுக்கும் நல்லது.. மாப்பிள்ளைக்கும் தினம் வாய்க்கு இதமா சாப்பாடுகிடைக்கும் " என்று சொல்ல வீடெங்கும் சிரிப்பலைவீசியது .
" சரிம்மா நீங்க நிதானமா சாப்பிடுங்க, இப்போ போனாத்தான் மீனும்நண்டும் புதுசாக்கிடைக்கும், நான் போய் வாங்கியாறேன்" என்று கையில் பையுடன் கிளம்பினார் நஜீம்பாய். தாத்தா நானும் வாரேன் என்று ஓடிவந்து காலைக்கட்டிக்கொண்ட பேரன் ஆலமிடம் " வாங்க பிள்ள, கூப்பிடு தூரந்தான் தோணிக்கரை காலாற நடந்துபோய் வாங்கிவருவோம் " என்றவாறே கைப்பிடித்து நடக்கத்தொடங்கினார்.
தோணிக்கரையில் காலைவெயிலை மறைத்தபடி காற்றுவீசிக்கொண்டிருந்தது, சிறிதும் பெரிதுமாக படகுகள் வந்தவண்ணமிருந்தன. வேடிக்கை பார்த்தபடி நடக்கும் பேரனை ரசித்தவாறே, வழக்கமாய் மீன் வாங்கும் அந்தோனியம்மாவிடம் வந்துநின்றார் நஜீம்பாய். அந்தோனியம்மாவுடன் இன்று ஒரு சிறுமியும் வந்திருந்தாள்.
"வாங்க பாய் வீட்ல எல்லாம் சொகமா..? , வாளை, வஞ்சனை, செங்காளை, பொருவாபொடி, நீலநண்டு எல்லாம் இருக்கு என்ன வேணும் உங்களுக்கு..." என்றபடி மீன்களை எடுத்து பலகையில் அடுக்கினாள் அந்தோனியம்மாள் "பொடிமீன் கொஞ்சம் குழம்புக்கும், வஞ்சனையும் நண்டும் போடுங்க" என்றார் நஜீம் பாய், அவள் எடுத்துவைத்த மீன்களை பார்த்தபடி, சொல்லுங்கம்மா என்னவிலை என்றார்.
அந்தோணியம்மா "என்னா பாய் உங்களுக்கு தெரியாதா, பொடிமீனுக்கு நாப்பதும், வஞ்சனைக்கி இருநூறும், நண்டுக்கு என்பதும் ஆக முன்னூத்தி இருவது ஆவுது, நீங்க முன்னூறு குடுங்க போதும் " என்று சொல்ல ...நஜிம்பாய் " அதெல்லாம் இல்ல எறநூத்தம்பது தான் பொறும் இந்த மீனு" இருவரும் விலை நிர்ணயத்தில் மும்முரமாய் இருக்க, ஆலம் அந்த சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
ஒருவழியாக இருநூத்தம்பது பேசி மீதம் ஐம்பது ரூபாயை அந்தோனியம்மாவிடமிருந்து வாங்கிப் பையில் போடும்போது தான் ஆலமும் அந்தச் சிறுமியும் பேசுவதைக் கவனித்தார் நஜீம் பாய்
ஆலம் அந்தச் சிறுமியிடம், " நீ ஏன் ஸ்கூல் போகல ? " என்று கேட்டான்.
அதற்கு அவள், " எங்கப்பா கடலுக்கு போவையில சுட்டுப்புட்டாங்களாம், திரும்பி வரவேஇல்ல, ஊட்டுல அம்மைக்கு மேலுக்கு சொகமில்ல..அதான் நானு மீனுவிக்க வந்துட்டேன் . " என்றாள்அவள்.
தனக்கு நேர்ந்தது என்னவென உணரமுடியாத வயதில் அந்த சிறுமிக்கு நேர்ந்ததை அறிந்து நொறுங்கினார் நஜீம் பாய். அந்தோனியம்மாவிடம் பேரம்பேசி மிச்சம் வாங்கிப்போட்ட அம்பது ரூபாய் மலையாய்க் கனத்தது அவர் சட்டைப் பையில்.
திரும்பி நடக்கும் வழியில் பேரன் ஆலம் கேட்டான், " தாத்தா உன்கிட்ட தான் நெறைய பணம் இருக்கே, கொஞ்சம் அந்த பொண்ணுக்கும் கொடுத்தா அவளும் படிக்குவா, செய்வியா தாத்தா " என்றான்.
தன் நெஞ்சின் சுமை நீங்க வழிசொன்ன பேரன் ஆலமை அன்புடன் அனைத்து நஜீம்பாய், "யார் மனிதர் மீது இரக்கம் காட்டவில்லையோ! அவர் மீது இறைவன் இரக்கம் காட்டமாட்டான்" என்பது நபிமொழி என்று சொன்ன நாஜிம் பாய்,
ஆலம் ஈகையை புனிதக்கடமையாய் சொல்லுது நம் மார்க்கம், ரமலான் மாதம் மட்டுமல்ல, துன்பத்துல இருக்கும் உயிர்களை பாக்கும்போதெல்லாம் அவங்களுக்கு உதவுறது நம்ம கடமை. பிள்ள நீங்க சொன்னது எனக்கு நபிமொழி கேட்டது மாதிரி இருக்கு நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு நாம உதவிசெய்வோம் "என்றார்.
ஆலமின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது...
No comments:
Post a Comment