Sunday, 8 January 2012

என்ன கிழித்தாய் இதுவரை




என்ன கிழித்தாய்
என்னைத் தவிர?
தேதித் தாள்கள் - என்
மேல் சட்டையின்
கழுத்தைப் பிடித்துக் கேட்கின்றன
என்ன கிழித்தாய்
என்னைத் தவிர?

என் லட்சியக் குதிரைகளுக்கு
கால்கள் முளைத்தும்
அதன் நோக்கம் இன்னும்
நொண்டியாய் இருப்பதன் காரணமென்ன?

எந்த பக்கம்
என் கிழக்கு?
எதுவரை
என் இலக்கு?

சிகரங்களில் ஏறி நானும்
சிம்மாசனத்தில் அமர்வேனா?
இல்லை
சிகரெட் போல
சில நொடிகளில்
சின்னாபின்னமாவேனா?

எதில் நான் மேதை ?
எது என் பாதை?

தர்மன் என்ற போதும்
தாயின் வயிற்றில்
தாங்கிக்கொள்ள பத்து மாதம்தான்.
நான் இன்னும் எத்தனை நாட்கள்
வீட்டுக்குள் விட்டில்பூச்சியாய் ?

சுனாமி - சூறாவளி
புயல் - புகம்பம்
இவை
அத்தனை அரங்கேறிய பிறகும்
பூமித்தாய் பத்திரப்படுத்திய
புதையல் நான் என்று
புரிவது எப்போது?

இது போராளிகள் நிறைந்த தேசம்
எனக்கு மட்டுமென்ன கோமாளி வேஷம்?

வானைத் தொடாமல் விடுவதில்லை
ஆனால் நான் இன்னும்
வாசலையே தாண்டவில்லை.

வீடு மட்டுமே உலகமில்லை
உலகமே உன் வீடுதான்.
இதை உணரும் வரை - நான்
உதவாக்கரை.

ஒரு சின்னஞ்சிறு பறவையின் பசிக்கு
என் வயிறு வலிக்கக் கண்டேன்.
போர்க்களத்தின் முனையில் நின்று
பொதுவுடைமை படித்துக் கொண்டேன்.

இனி
நான் விழுந்தால் விதையாக..
மறுபடி எழுந்தால்
விதைக்குள்ளிருக்கும் விருட்சமாக..

இனி
நான் மரித்தால் மகாத்மா.
உலகில்
மரித்தாலும் மரிக்காது
என் ஆத்மா....

No comments:

Post a Comment