Friday, 11 November 2011

 
 
எந்திரத் தனமாகி போன வாழ்க்கை,
எழுந்திருக்கும் போதே
இட்லிக்குத் தொட்டுக்கொள்ள ..
என்ன செய்வது ...
என ஆரம்பித்து ..
மதிய உணவு ..
இரவு சிற்றுண்டி ,
என அனைத்து ஏற்பாடுகளையும் ..
முடித்தாக வேண்டும் ...
எட்டு மணிக்குள்

அதற்குள் ...
நாளைய பள்ளி சீருடைக்காய்..
நனைந்து கொண்டிருக்கிறேன் ..
கிணற்றடியில்...
அத்தனையும் முடித்து நிமிர்வதற்குள்
அவசர அவசரமாய் ..
வந்து போனது பள்ளி ஊர்தி .

அடித்து பிடித்து ...
அரைகுறை அலங்காரத்தோடு ..
வந்து சேர்கிறேன் அலுவலகம் .
அங்கும் இங்குமாய் ..
ஓடிக் களைத்து ..
அடைத்து போன ..
டப்பா உணவிலேயும் மீதம் வைத்து ...
உண்டு முடிப்பதற்குள்
பள்ளி வாகனம் வந்திருக்குமா ?
பால் எடுத்து வைத்தோமா?
என பல யோசனைகளோடு ..
கழிகிறது மீத நேரமும் ...

வயிற்றைக்  கிள்ளும் பசியோடும் ,
வாடிய முகத்தோடும் ..
வாசலை நெருங்குகிறேன் ..
அம்மாவென ஓடி வந்து ..
கழுத்தைக்  கட்டி ...
கன்னம் நனைக்கும் ...
அவன் முத்தத்தோடு சேர்ந்து ...
ஒட்டிக் கொள்கிறது
என்னில் ஒளிந்திருந்த ...
சந்தோஷமும், சுறுசுறுப்பும் .....!



No comments:

Post a Comment