Wednesday, 6 July 2011

மருந்திடுவார் யாரோ?

 
இதோ
இந்த இருண்ட வானத்தின்
வாசற்படியில் வலுவிழந்து நிற்கின்றேன்...


எங்கே நான் விழுவது?
என் கரங்களின் ரேகையை
என் விதி அழித்துவிட்டது!

வாழ்க்கை என்னும் கடலில்
பயணிக்கும் போது
துடுப்புகளே தொலைந்து போனால்
தூண்டிலை வைத்து என்ன செய்வது?


ஏமாறுதலின் ஏகாதிபத்தியமே
என்னிடம்தான் உள்ளது...
இருந்தும்
சாயம் பூசிய வண்ணக் கோழிக்குஞ்சாய்
வலம் வருகின்றேன் வீழ்வதறிந்தும்...!!


என்னைத் தொடர்ந்து வந்த
என் பாதங்கள்
இப்போது என் பயணிப்பை
தனித்து விட்டுச் செல்கின்றன....

எப்போதும் பார்த்துக் கொண்டிருந்த
பூச்செடி
இப்போதெல்லாம்
கள்ளி செடியாகவே தெரிகிறது!


இதயம் முழுதும்
பாறையாகி விட்டதால்
விதைக்கும் விதைகளும்
வீரியமற்றே கிடக்கின்றன....

காலங்களை பிடித்திழுக்கும்
இந்த காயங்களில் மருந்திடுவார் யாரோ?
அந்தி சரிகின்ற போதெல்லாம்
என் புலம்பல்கள் புலம்பெயர
ஆரம்பிக்கின்றன....


விழிகள் விரிய விசாரிக்கின்றேன்
விருப்பத்தின் வாசலில் விளிக்கின்றேன்
விரையும் வினாடிகளிலும்
விதியோடு விளையாடுகின்றேன்...

No comments:

Post a Comment