Saturday, 11 June 2011
ஐந்து பெரிது ஆறு சிறிது
" சீ மிருகமே "
என்று
மனிதனை திட்டாதே
மனிதனே.
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பை கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டோ?
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமா..?
இன்னொன்று
பறவைக்கு வேர்ப்பதில்லை.
எந்த பறவையும்
கூடு கட்டி
வாடகைக்கு விடுவதில்லை
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
கவனி மனிதனே
கூட்டுவாழ்க்கைuஇன� ��னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள் தான்
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்� �ை.
மனிதா
இதை மனங்கொள்
கற்ப வாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவை
சேர்வதில்லை.
ஒருவனுக்கொருத்தி
உனக்குவார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடி அன்றி
பிற ஜோடி தொடுவதில்லை
பூகம்பம் வருகுதெனில்
அலைபாயும் விலங்குகள
அடி வயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்.
இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா?
ஐந்து பெரிதா ..?
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு.
மாண்டால்--
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம்
நீ மாண்டால்....
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்.
ஒன்று கேட்கிறேன்
எல்லா விலங்கும்
மனிதனுக்கு பாலூட்டும்
எவளேனும் ஒரு தாய்
விலங்குக்குப் பாலூட்டியதுண்டோ..?
"சீ மிருகமே
என்று
மனிதனை திட்டாதே
மனிதனே.
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம்.....
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
"சீ மனிதனே "
(இந்த பூக்கள் விற்பனைக்கல்ல.......எ� ��்ற வைரமுத்து கவிதை தொகுதியிலிருந்து)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment