Saturday, 11 June 2011

கடவுளின் மற்றொரு படைப்பு



உறக்கத்தில் இருந்து விழித்தார் கடவுள்...
எப்போது உறக்கத்தில் மூழ்கினார்? - வேண்டாம் இக்கேள்வி..

நடமாடி நாட்கள் ஆயின... நாளை பூமி செல்வோம் என்றார்..
ஓட்டை விழுந்த ஒசோன் வழியே வடிக்கட்டபடாமல் வந்து சேர்ந்தார்..

தாம் படைத்தவற்றை பார்க்கும் ஆவலில் பூமியின் நிலபரப்பை காண,
கால் வைக்க இல்லை ஓர் இடம், கட்டிடங்களின் கலாச்சாரம் அங்கே..

இடது வலது புறங்களில் பார்க்க, குப்பை இல்லா குப்பைத்தொட்டிகள் அங்கே..
குப்பையாகி போன குளங்கள் இங்கே..
கூட்டத்தின் நெரிசலில் சிக்கி பசித்துப்போனார்..

உணவிற்காக காடுகளை நோக்கினார்... இல்லை இனிய கனிகள் அங்கே.
படைக்கப்பட்டவை எதும் இல்லை இங்கே.

கோவினுள் சென்றாவது ஓய்வு எடுக்கலாம் என எண்ணி அங்கே செல்ல,
காசு கேட்டு மறித்தனர் அவரை நுழைவு கட்டணம் என்ற பெயரில்..




தன் தாய் பூமியை அழைத்தார்.

ஏன் இவ்வளவு அமைதி, பொறுமை- ஆவேசத்துடன் கடவுள் வினவ..

என்ன செய்ய கடவுளே... கொஞ்சம் கோபப்பட்டாலும் அறியா பச்சிளங்குழந்தைகள் தீயில் கருகுகின்றனர்..

சரி.. சற்று மாறுபட்டு சுனாமியாக எழுந்தால் சுரண்டுபவர்கள் சுகம் பெறுகின்றனர்..

பூமித்தாய்க்கு அழ கண்ணீர் இல்லை, கண்ணீரெல்லாம் கடலாகிப்போனது..

ஆமாம், ஏன் உன் உடபெல்லாம் இத்தனை தழும்புகள்? - கடவுள் கேட்டார்.
இவை இம்மக்கள் என்னை அணுகுண்டு போட்டியால் பிரித்துக் கொண்ட நாடுகளின் எல்லை கோடுகள்தாம்..

ஆமாம் நான் உனக்கு கொடுத்த பச்சை புடவை எங்கே?-கடவுள் கேட்க,
மனிதர்களின் கண்டுபிடிப்பான அறிவியல் எனும் கைகளை கொண்டு உள்ளமின்றி உருவிக்கொண்டனர் என்றது பூமி.

தன் மகன் சூரியனை அழைத்தார்.

ஏன் சூரியனே! சூடாறி போய் உள்ளாய்? கடவுள் கேட்டார்
ஆம் கடவுளே, சோலார் அடுப்பினில் அல்லவா என் சுடர் அடங்கி விட்டது..

நீ சற்று சூடானால் என்ன??
சூடானாலும் என்ன செய்ய கடவுளே, குளிர் பெட்டியினுள் அல்லவா ஒளிந்து கொள்கின்றனர்.

என்னை சுற்றுவதில் எது இயற்கை கோள்கள், எது செயற்கை கோள்கள் என தெரியவில்லை ஆண்டவனே!

என்னை காப்பாற்றுங்கள் இறைவா!! செயற்கை கோள் மூலம் என் சக்தியை உறுஞ்சப்போகிறார்களாம்..

கோள்கள் என்னை சுற்றுவது போல், பல செயற்கை கோள்களை அமைத்து அதை நான் சுற்றிவர திட்டமிட்டுள்ளார்களாம்.
சூடாறிப்போன சூரியன் முறையிட்டு சுருண்டது...

தன் தம்பி காற்றை அழைத்தார்.

அவன் வரும்முன்பே இருமினார் கடவுள்..

கண்களுக்கு தெரியாதவானாய் படைத்தார் இறைவன், இப்போது கண்களையே கசக்க வைத்தான்.
புகை மூட்டமாய் புதைந்து போனான் காற்று.

எப்படி இவ்வளவு மாசு? - கடவுள் கேட்க,

வாகனங்கள் கக்கிய புகை, வரிசையில் எரியும் பிணத்தின் புகை,
மனிதர்கள் விடுகின்ற சிகரெட் புகை, அணுகுண்டுகளின் சீக்ரெட் புகை, என கலங்கியது காற்று.


தன் தங்கை தண்ணீரை அழைத்தார்.

மதுக்கடையில் பாட்டில்களாகவும், தண்ணீர் பொட்டலமாகவும்,
20 ரூபாய்க்கு ஒரு வாளி என்றாகியும் போன தன் தங்கையின் நிலைகண்டு திகைத்துப்போனார்.

கையை எடுத்து தலையில் வைத்து கும்பிட்டுவிட்டு,
வேண்டாம் இவ்வுலகம் என தப்பிச் சென்றார் வேறொரு கிரகம்...

அங்கு சென்று தம் மனம் விரும்பியதை படைத்தார்,

ஓடும் நீரோடை, அதில் கொட்டும் அருவி,

அருகில் ஆலமரம், அதில் பல குருவி,

சாக்கடை கலக்காத சமுத்திரம், சரிவில் கணக்கான் சங்கீதம்,

குயில்களின் இனிய இசை, தென்றலின் வருடல்,

பூக்களின் புது வசந்தம், பூரிக்க வைக்கும் வண்ணங்கள்,

புலியும் மானும் சேர்ந்து வாழ குகை,

கனி நிறைந்த சோலை, கண்ணுக்கினிய மாலை,

காடுகளின் நெடிய வழி, காட்சிகளை கவரும் விழி,

ஒற்றுமையுடன் வாழும் விலங்குகள், ஒரு வகையும் விடாத தாவரங்கள்,

சந்தன காற்று, பன்னீர் தண்ணீர், வெதுவெதுப்பான சூரியன்,

தழும்புகள் இல்லா பசுமை போர்த்திய நிலம்,


என எல்லாவற்றையும் படைத்தார்,

ஜாக்கிரைதாக மனிதனைத் தவிர....

No comments:

Post a Comment