Tuesday 21 June 2011

தாய்க்கிழவி!





கண்கள் இடுக்கி சுருக்கி
முடிந்த மட்டும் பார்வையை கூராக்கி
பாதையின் தொடுவானம் வரை
பார்த்தாள் அந்தக் கிழவி....


வந்து போன கடைசிப் பேருந்தும்
வழக்கம்போல
இவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை...


இடுக்கி சுருக்கிய பார்வையை
மீண்டும் தளர்த்திக்கொண்டு
எதிர்பார்த்த ஏமாற்றம் போல
சுள்ளியை சும்மாட்டில் வைத்துக்கொண்டு
தன் பாதை திரும்பினாள்...

வெளிநாட்டில் சம்பாதித்து தாய்க்கு
பட்டுபுடவை வாங்கி தருவதாய்
சென்ற மகன் இப்போது
தனக்கு கோடிப் புடவையேனும்
போட வருவானா என்ற ஏக்கம்
நாள்தோறும் தேய்பிறை நிலவாய் ஆனது...

அந்நிய மண்ணில் புதையுண்டு போனது தெரியாமல்
மகன் வந்து தான்
தனக்கு கொள்ளி வைப்பான் என
சுள்ளிகள் சேகரித்து கொண்டே இருந்தாள்
நாளும் சுண்டும் தன் ரத்தத்தின்
கடைசி சொட்டு வரை
நம்பிக்கையை மட்டுமே
வைத்திருந்த அந்த தாய்க்கிழவி!

No comments:

Post a Comment