Thursday, 9 June 2011

தமக்குத் தாமே பேசிக்கொண்ட தவளைகள்





குட்டைக்கு அருகில் இருந்த அடர்ந்த புதரில் தவளைக் குடும்பம் ஒன்று வசித்தது...
தண்ணீரில் ஆனந்தக் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய தவளை மற்ற தவளைகளைப் பார்த்து சொன்னது: "சொர்க்கமும் பூமியும் நமக்காகத்தான்... ஆகவே எதிலும் நாம் வாழலாம்."
"அய்... ஜாலி!" குட்டித் தவளைகள் சந்தோஷமாய் கூச்சலிட்டன.

பெரிய தவளை சொன்னது, " தண்ணீரும் காற்றும் நமக்காகத்தான்."
"ஆஹா ஜாலி!"

"காற்றில் பறக்கும் வண்டுகளும் நிலத்தில் இருக்கும் பழங்களும் தவளைகளுக்காகத்தான்."
"ஜாலியோ ஜாலி!" என்று மற்ற தவளைகள் நீருக்குள் முக்குளித்து எழுந்தபோது, திடீரென்று பெரிய தவளை, "ஐயோ, பாம்பு" என்று கத்தியது.

தவளைக் கூட்டம் சப்தமற்று ஒடுங்க, புதரிலிருந்து வெளிப்பட்ட பாம்பு ஒரு தவளையைக் கவ்வி விழுங்கியது.
பாம்பு மறைந்ததும் உயிர் பயத்தில் உறைந்திருந்த தவளைகள், "ஆ, என்ன பயங்கரம்... பாவம் அந்த அற்பப் பிறவி..." என்று உயிரிழந்த தவளைக்காக வருத்தப்பட்டன.
அப்போது பெரிய தவளையிடம் ஒரு தவளை, "பாம்புகள் இருப்பதும்கூட நமக்காகத்தானா?" என்று அச்சத்தோடு கேட்டது.
"நிச்சயமாக! அதிலென்ன சந்தேகம்? நமது நன்மைக்காகத்தான் அவை இருக்கின்றன. நம்மில் சிலரை அவ்வப்போது சாப்பிடுவதற்கு பாம்புகள் இல்லாமல் போனால், அதன்பிறகு நாம் வதவதவென்று பெருகி விடுவோம். அப்படிப் பெருத்துவிட்டால் நாம் அனைவரும் வசிப்பதற்கு இடமிருக்காது, இல்லையா?" என்றது பெரிய தவளை.

"நியாயம்தான்" என்று ஆமோதித்தது தவளைக் கூட்டம்.


நல்லது கெட்டது என்பதற்கு தீர்மானகரமான அளவுகோல் இல்லை.
ஏதேனும் ஒரு சம்பவம் நிகழும்போது அதை நல்லதன் பக்கம் இருந்து பார்க்கிறாயா,
இல்லை கெட்டதன் பக்கம் இருந்து பார்க்கிறாயா என்பதைப் பொருத்தே அது தீர்மானிக்கப்படும்.

ஜென் கதைகள்.
தமிழில்: சேஷையா ரவி.

தமிழ் தாயகத்திற்காக,
என்றும் அன்புடன்,
கோ.வரதராஜன்.

No comments:

Post a Comment